வடிவமைப்புக்கு முந்திய ஆய்வு

எதிர்வரும் கலந்தாய்வுகளுக்கும் பொதுமக்களுக்கான தகவல்வழங்கும் நிகழ்வுகளுக்கும் தயார்படுத்துவதற்காக, டிசம்பர் 2020லே இயக்குனர் சபையானது வடிவமைப்புக்கு முந்திய ஆய்வு ஒன்றைத் தொடங்கியது. ஏதாவதொரு வகையிலான நிதியாதரவு உறுதிசெய்யப்பட்டபின் உத்தியோக பூர்வமான கோட்பாட்டு வடிவமைப்பு ஆரம்பிப்பதற்கு முன்னான ஆய்வே வடிவமைப்புக்கு முந்திய கட்டமாகும். தமிழ் சமூக மையத்தைப் பொறுத்தவரையிலே, வடிவமைப்புக்கு முந்திய கட்டமானது செயற்றிட்டத்திற்கான வடிவமைப்பு வரையறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிசெய்யவும், அவை உள்ளிணைக்கும் பண்பினவாயும் வரவேற்கும் பண்பினவாயும் அமைந்து வடகிழக்கு ஸ்காபரோவாழ் தமிழ்க் குமுகத்தைப் பிரதிபலிப்பதோடு அப்பகுதியில் வாழும் ஏனைய இனத்துவப்படுத்தப்பட்ட குமுகங்களையும் அரவணைப்பதாக அமைந்துள்ளன என உறுதிசெய்யவும் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பணியானது குமுகத்தின் தேவைகளை ஆதரிப்பதோடு குமுகத்தின் கதையாடல்களுக்கான ஊடகமாகவும் அமைந்த பண்பிலானதொரு கட்டிடவியலைச் சுட்டுகிறது.

வடிவமைப்புக்கு முந்திய ஆய்வானது இந்தக் காணி வழங்கும் வாய்ப்புகளையும் கட்டுப்பாடுகளையும் எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்தலாம் என எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆய்வானது இதுவரை காலம்வரையான இணையவழிக் கலந்தாய்வுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்த வடிவமைப்புகள் பூர்வாங்கமானவை. இவை செயற்றிட்டத்தின் அடுத்தடுத்த கட்டங்களிலும் மேலதிக கலந்தாய்வுகள் ஊடாகவும் மேலும் செம்மைப்படுத்தப்படும்.

வடிவமைப்புக்கான அடிப்படை வழிகாட்டிகளாக ஐந்து விடயங்களை நாம் மனதிலிருத்தினோம்: (1) கலந்தாய்வுகளின் அடிப்படையிலான சேவைத்திட்ட வெளிகள் (2) சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான உறுதிப்பாடு (3) பூர்வகுடிக் குமுகங்களை மதித்தல் (4) குடியிருப்பாளர்களின் கரிசனங்களுக்கான தீர்வுகள் (5) தமிழ்ப் பண்பாடும் வரலாறும்.

தமிழரின் பாரம்பரியக் கட்டிடக்கலை (மைய முற்றம்), தமிழ்மொழியும் சங்க இலக்கியக் கோட்பாடுகளும் (ஐந்திணைகள்), புலப்பெயர்வையும் ஏதிலிவாழ்வையும் புகலடைவையும் உள்ளடக்கிய தமிழரின் அண்மைக்கால வரலாறு (கப்பல்) ஆகியவற்றால் வடிவமைப்பு அகத்தூண்டல் பெற்றுள்ளது.

மோர்ணிங்சைட் ஹைட்ஸ் சுற்றாடலை தமிழ் சமூக மையம் உருமாற்றிவிடும். குமுகத்தின் சமுதாயம், பொருளாதாரம், பண்பாடு, அரசியல், உடல்நலம் ஆகியன சார்ந்த வேணவா, வெறும் கட்டிடம் மட்டுமல்லாத ஒரு கட்டுமானத் தோற்றத்தில் உயிர்பெறும். தமிழ் சமூக மையமானது இயற்கைச் சுற்றாடலைப் பேணவும் முன்னேற்றவும் விழையும் ஒரு அகப்படுத்தி இணைந்த குமுகத்தைக் கட்டியெழுப்ப உதவும்.