தமிழ் சமூக மையம்

தமிழ் சமூக நிலையத்திற்கான நிதியாதரவுக் கோரிக்கையை வழிபடுத்துக்குழு அரசிடம் கையளித்தது

தொரந்தோ, ஒன்றாரியோ - தமிழ் சமூக மையம் அமைப்பதற்கான வழிபடுத்துக்குழு ‘கனடாவின் உட்கட்டுமானத்தில் முதலிடல், பண்பாடு மற்றும் பொழுதுபோக்கு ஒழுக்கு’ என்ற செயற்திட்டத்திற்கான தமது விண்ணப்பத்தை நவம்பர் 11 அன்று கையளித்தனர். ஆதரவும் கொடை உறுதிமொழிகளும் வழங்கிய குமுக அங்கத்தவர்கள் அனைவருக்கும் வழிபடுத்துக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

மாநில மத்திய அரசுகள் இந்த நிதியாதரவுத் திட்டத்தை ஓகஸ்ற் மாதத்தின் இறுதியில் தொடக்கிவைத்தன. எமது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுமானால் தமிழ் சமூக மையத்தை நிர்மாணிப்பதற்கான செலவீனத்தின் 73 விழுக்காடு வரையான தொகையை அரசிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த உதவித்தொகை எமது சமூகத்திற்கு ஒப்பற்ற பெருவாய்ப்பாக அமைந்துள்ளது. வழிபடுத்துக்குழு கொடைவழங்குவதற்கான உறுதிமொழிகளை வழங்குமாறு குமுகத்தினரை நாடியிருந்தது. இந்தத் திட்டத்தின் மொத்த செலவு 40 மில்லியன் டொலர்களாக இருக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளது. இதிலே, சமூகத்தின் பங்களிப்பாக 10.8 மில்லியன் டொலர்களை எம்மால் திரட்டமுடியும் என நிரூபிக்க வேண்டியிருந்தது. இதுவரை 11.2 மில்லியன் டொலர்கள் கொடை உறுதிமொழியாக எம்மால் திரட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.

எமது விண்ணப்பம் பற்றி 2020ம் ஆண்டின் இளவேனிற்காலத்தின் நடுப்பகுதியளவில் மாநில அரசு எமக்கு அறியத்தரும் என வழிபடுத்துக்குழு எதிர்பார்க்கிறது. இது சம்பந்தமான தகவல்கள் கிடைக்கும்போது வழிபடுத்துக்குழுவால் அவை குமுகத்திற்கு தெரிவிக்கப்படும்.